மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சித்து வருகிறார் : ஆ.ராசா
Coimbatore News- இந்தியாவை, மோடியிடம் இருந்து காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார் என ஆ. ராசா எம்பி பேசினார்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை ராஜவீதி தேர்முட்டி திடலில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திமுக துணைப்பொதுச் செயலாளரும், எம்.பி யுமான ஆ. ராசா பேசும்போது, ”திமுக ஆட்சியில் கோவைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வந்துள்ளது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது, மிகவும் இறுக்கமாகவும் தயக்கமாகவும் இருந்தார். அவர் பொறுப்பேற்ற பொழுது கொரோனா உச்சகட்டத்தில் இருந்தது. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க படுக்கையில்லை.
இப்படிபட்ட சூழ்நிலையில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கிறார். அப்பொழுது நிதி அமைச்சரை அழைத்து ஆலோசித்த போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 5 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு போய் இருக்கிறார் என்று தெரியவருகிறது. கொரோனா, மற்றும் ரூ. 5 லட்சம் கோடி கடன் போன்றவைகள் இருந்தாலும், ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் தனது குடும்பத்தை கவனிக்க முடியாமல் பாதிப்படைந்த அனைவருக்கும் ரூ4,000 உதவித்தொகை வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். அதை செய்தும் காட்டினார். இதுதான் ஒரு தலைவனுக்குரிய பண்பாகும்.
தற்போது பிரதமர் மோடி பல்லடத்துக்கு வந்து சென்றுள்ளார். ஆனால் மணிப்பூரிலே ஒரு கிறிஸ்துவ பெண்ணை 200 பேர் நிர்வாணப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுவரை பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்கு செல்லவில்லை. ஏனென்றால் அந்த மாநிலத்தின் முதல்வர் பிஜேபிகாரர். இந்த சம்பவம் காரணமாக நாடாளுமன்றத்திலே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, எங்கள் மாநிலத்தில் நடப்பது தான் என்று கூறினார். இந்த சம்பவம் நடந்த பின்பும் பாஜகவை சேர்ந்த மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் ராஜினாமா செய்தாரா? மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் பைரன்சிங் ஒரு காண்டாமிருகம். இவரை ஆதரிக்கும் மோடி மற்றும் அமித்சாவிற்கு என்ன பேர் வைக்கலாம்? என்று கோவை மக்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்.
நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை பிரதமர் இந்த கேள்வி நேரம் மூலமாக நன்கு தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இதுவரை கேள்வி நேரத்திற்கு பிரதமர் மோடி வந்தது இல்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், பிரதமர் மோடி மற்ற நாடுகளுக்கு டூர் சென்று கொண்டிருப்பார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை. தேர்தல் நேரத்தில் அதானி உள்பட பலர் ரூ 6500 கோடி மோடிக்கு ரகசியமாய் கொடுத்துள்ளனர். அப்படி ரகசியமாய் பணம் வாங்குவதற்கு என்ன அவசியம்? இதுவரை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்க பிரதமர் மோடி முன்வரவில்லை.
பிரதமர் மோடி கூறுகிறார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக இருக்காது என்று. நான் கூறுகிறேன் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தற்போது உள்ள ஒன்றிய அரசை மாற்றினால் கண்டிப்பாக பிரதமர் மோடி சிறைக்குச் செல்வார். பெரியார், அண்ணா, கருணாநிதி தமிழை வளர்த்தனர். தமிழ்நாட்டை வளர்த்தனர். இவற்றை தாண்டி திமுக தலைவர், இன்றைய முதல்வர் இந்தியாவை வளர்க்க மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முயற்சி எடுத்து வருகின்றார்” எனத் தெரிவித்தார்.