கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே வந்த தனியார் வாகனத்தால் பரபரப்பு

கோவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தனியார் வாகனம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது

Update: 2024-04-22 08:24 GMT

காரில் வந்தவரிடம் முகவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

நடந்து முடிந்த கோவை மக்களவை தேர்தலில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்களும் அங்கு 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதை யடுத்து, கல்லூரியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டைகள் காண்பித்து உள்ளே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வாகனங்கள் உள்ளிட்ட பிறரின் வாகனங்கள் கல்லூரியின் மைதானத்தில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி பணிபுரியும் பேராசிரியர் ஒருவரின் கார் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே நிறுத்தியதால், அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்களின் கார்களே உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் கல்லூரியில் பணிபுரிபவர்களின் வாகனங்கள் எப்படி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை அனுமதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் கல்லூரிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் மைதானத்தில் மட்டுமே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தனியார் வாகனம் வந்த விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News