கோவை குனியமுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக்கொலை
கோவை குனியமுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
கோவை குனியமுத்தூர் பகுதியில் மன நலம் பாதிக்கப்பட்டவர் அடித்து கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42) மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள குழிபைப் சந்து அருகே தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் நாகராஜ் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர்.
அப்போது யாரோ ஒருவர் அவரை உருட்டு கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நாகராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அவர் யாரிடமும் பிரச்சினை செய்யாத நபர் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நபரை அடித்து கொலை செய்தது யார்? இதற்கான காரணம் என்ன என்பது போலீசாருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.