மருதமலை முருகன் கோவிலில் தேரோட்டம் - திராளமான பக்தர்கள் பங்கேற்பு
முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா நடைபெற்றது
தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அல்லது அந்த தினத்தையொட்டி உள்ள பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். இந்த தினத்தில் தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தைப்பூச விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று கோவை மாவட்டத்தின் முக்கிய திருக்கோயிலான முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் விநாயகர், மற்றும் சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை தம்பதி சமேதமாக திருத்தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தைப்பூசத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை வலம் வந்த சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. தைப்பூச திருநாளை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.