தேசிய அளவிலான கோ கேம் போட்டியில் 12 வயது மாணவி தங்கம் வென்று சாதனை
Coimbatore News- தங்கம் வென்ற மாணவி உள்ளிட்ட கோவை ரயில் நிலையத்திற்கு வந்த அனைவருக்கும் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.;
Coimbatore News, Coimbatore News Today- 2024 ஆம் ஆண்டு தேசிய அளவில் 2 வது ஜோடி கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 வரை பீகாரில் போஜ்பூர், ஆரா ஆகிய பகுதிகளில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. அதில் சீனியர், ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதில் சீனியர் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - பீகார் மாநிலங்கள் விளையாடியதில் பீகார் மாநிலம் 43 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு 46 புள்ளிகள் பெற்று 3 புள்ளி வித்தியாசத்தில் தமிழகம் முதல் இடம் பிடித்தது. ஜூனியர் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - தெலுங்கானா விளையாடியதில் தெலுங்கானா 14 புள்ளிகள் பெற்ற நிலையில், தமிழ்நாடு 38 புள்ளிகள் பெற்று 24 புள்ளி வித்தியாசத்தில் தமிழகம் முதல் இடம் பிடித்தது. சப் ஜூனியர் அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - ஆந்திரா விளையாடியதில் ஆந்திரப் பிரதேசம் 18 புள்ளிகள் பெற்றது.
தமிழ்நாடு 11 புள்ளிகள் பெற்று 7 புள்ளி வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தமிழகம் 3 இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது பெண் குழந்தை லக்சனா, 14 வயது அபினோவ் மற்றும் கதிர்வேல் ஆகியோர் தங்கம் வென்றனர். சஞ்சய் மூன்றாவது இடம் பிடித்த வெண்கலம் வென்றார்.
கோவை ரயில் நிலையம் வந்த இவர்கள் அனைவருக்கும் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, செஸ் விளையாட்டு போட்டி போன்று ஆசியா அளவில் உள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு இதனை மேம்படுத்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் மாணவர்களை ஊக்குவித்து கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.