ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதி

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதிக்கப்படுவதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-15 10:45 GMT

பைல் படம்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது.

தருமபுரி மாவட்டத்திலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொற்று அதிகமாக பரவியிருந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

தொற்று குறைந்ததால் தமிழக அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகமானது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சுற்றுலா பயணிகள் தொற்றுக்கு பாதிக்காத வகையில், சுற்றுலாப்பயணிகள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் ஆற்றிலும் அருவி பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதித்து பல்வேறு நிபந்தனையுடன் சுற்றுலா தளம் செயல்பட்டு வந்தது.

தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், சுற்றுலாப் பயணிகள் அருவியிலும், ஆற்று பகுதிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது வெப்பம் அதிகரிப்பு காரணமாக மக்கள் நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வது வழக்கம். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நம்பியுள்ள வியாபாரிகள் பரிசல் ஓட்டுநர் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News