போர்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ள சிபிஎம் வலியுறுத்தல்
வெள்ள சேதம் : மாதிரி படம்
வடகிழக்கு பருவமழையினால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி,ஆறு, குளங்களால் நிரம்பி ஊருக்குள் மற்றும் வயல்வெளிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடி மீட்பு மற்றும் நிவாரணங்களை போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் என் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்,
அந்த மனுவில், தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி, மாவட்டத்தில் பல ஏரிகள் உடைந்து ஊருக்குள் மற்றும் வயல்களிலும் மழை வெள்ளநீர் புகுந்து மக்கள் மற்றும் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,
இந்தநிலை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடந்து வருகிறது, மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகள், கால்வாய்களில் வெள்ளநீர் கரைபுரண்டு பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது, அதனால் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், அனைத்து துறை அலுவலர்களை முடுக்கி போர்கால அடிப்படையில் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்து உள்ள நகர,கிராமபுற மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தக்கவைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவேண்டும்,
மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டு கூரை வீடுகள் இடிந்து, இழந்தவர்களுக்கு உரிய அரசு நிவாரணம் விரைவாக பெற்று தந்து, அவர்களுக்கு அரசு இலவச வீடு வழங்க வேண்டும், மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கி பயிர் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளை பாகுபாடு இன்றி வேளாண்மைதுறை மற்றும் வருவாய்துறை இணைந்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஏரி, குளங்கள், குட்டைகள், ஆற்று வாய்க்கால்களை மேம்படுத்தி, ஆக்ரமிப்புகளை அகறறி சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu