குடிபோதை தகராறு இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிர் இழப்பு..!

குடிபோதை தகராறு இரும்பு கம்பியால் தாக்கியதில்  ஒருவர் உயிர் இழப்பு..!
X

கைது செய்யப்பட்ட  ரவி.

கும்மிடிப்பூண்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் இரும்பு கம்பியால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆந்திர மாநிலம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருக்கு சொந்தமான லேத் பட்டறை ஒன்று புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி புதுப்பேட்டை பகுதியில் உள்ளது.

இந்த லேத் பட்டறையில் ஐந்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவையான வாசர் எனப்படும் உதிரி பாகங்கள் செய்து கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இன்பன் (வயது 45), திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 65)வழக்கம் போல் இருவரும் புதுப்பேட்டையில் உள்ள லேத் பட்டறைக்கு பணிக்கு வந்துள்ளனர். அப்போது பணி முடிந்தவுடன் இருவரும் அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்று மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது இன்பன் திடீரென ரவியின் கைவிரல்களை பிடித்து வெறித்தனமாக கடித்துள்ளார். ரவி வலி தாங்க முடியாமல் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து பலமுறை முகத்தில் அடித்தாராம்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இன்பன் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!