கெத்து காட்டும் விவசாயிகள் : பரிதவிக்கும் வியாபாரிகள்..!

கெத்து காட்டும் விவசாயிகள் : பரிதவிக்கும் வியாபாரிகள்..!
X

ஆடு மேய்க்கும் விவசாயி (கோப்பு படம்)

பொங்கல் விழாவிற்கு மறுநாள் விற்பனைக்காக ஆடுகள் வாங்கும் முயற்சிகளில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தை பொங்கல் விழாவிற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் ஆடு வாங்கும் பணிகளில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடைசி நேரத்தில் விற்றால் விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் ஆடுகளை தற்போது விற்க வாய்ப்பில்லை என ‛கெத்து’ காட்டி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை பல தென் மாவட்டங்களில் ‛ஆட்டுக்கறி’ திருவிழா போல் கொண்டாடப்படும். பொங்கல் அன்று ஸ்வீட், பட்டாசு இருக்கோ, இல்லையோ பொங்கல் விழாவிற்கு மறுநாள் அத்தனை வீடுகளிலும் ‛ஆட்டுக்கறி’ இருக்கும். இதனால் முதல்நாள் இரவு 11 மணிக்கே ஆடுகளை அடித்து கறி வெட்டத் தொடங்கி விடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் பல நுாறு ஆடுகள் அறுத்து இறைச்சி விற்பனை செய்யப்படும். பல இறைச்சிக்கடைகளில் வழக்கமாக கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அன்று ‛இறைச்சி’ கிடைக்காமல் பிராய்லர் கோழிக்கடையை தேடிச் செல்பவர்களும் உண்டு.

ஆட்டுக்கறியினை பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுக்கிராம ஆடுகளின் இறைச்சி சுவையில் முதல் இடத்திலும், தேனி மாவட்டம் வருஷநாடு, கடமலைக்குண்டு பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் இரண்டாம் இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் மூன்றாம் இடத்திலும், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், சுற்றுக்கிராம பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் நான்காம் இடத்திலும் உள்ளன.

'பிராய்லர்’ ஆடுகள்

இதனால் ஆட்டு இறைச்சிக்கடை வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர இந்த நான்கு பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளை வாங்குவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆந்திரா, கர்நாடகா ஆடுகள், ‛பிராய்லர்’ ஆடுகள் என கிண்டலாக அழைக்கப்படும். இறைச்சியில் சுவை இருக்காது. எனவே வேறு வழியில்லாத நிலையில் ஆந்திரா, கர்நாடகா பகுதி ஆடுகளை வாங்குவார்கள். தற்போது தீபாவளி நெருங்குவதால் ஆடுகளை வாங்கி தங்கள் பகுதியில் கட்டிப்போட்டு வளர்ப்பது வழக்கம். எனவே ஆடு வாங்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

தேவைக்கு ஏற்ப ஆடுகள் கிடைப்பதில்லை என்பதை ஆடு வளர்க்கும் விவசாயிகளும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இதனால் ‛எப்படியும் வந்துதானே ஆக வேண்டும்’ என்று விவசாயிகளும் கெத்து காட்ட தொடங்கி உள்ளனர். தற்போது ஆடுகளை விற்கப்போவதில்லை. இன்னும் சில நாட்கள் ஆகட்டும் பார்க்கலாம் என வியாபாரிகளிடம் பதில் சொல்லி வருகின்றனர்.

விவசாயிகள் ‛கெத்து’ காட்டுவதால், ஆடுகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பொங்கல் விழாவிற்கு மறுநாள் ஆட்டுக்கறி விலையை கிலோவிற்கு 100 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளதாகவும், தற்போது ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 1100 ரூபாய்கு விற்கப்படுகிறது. விழாக்காலங்களில் ஒரு கிலோ 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விலை உயரும் வாய்ப்புகள் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!