பெட்ரோல், டீசல் விலையை குறைக்க விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியா முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் லாரிகள், பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் ஓடவில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் உபயோகம் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 20 முதல் 25 பைசா வரை உயர்த்தி வருகின்றன. இது கண்டனத்திற்குரியது. விவசாயிகள் வேளாண்மைக்கு பயன்படுத்தும் உழவு டிராக்டர்கள், மருந்து தெளிக்கும் கருவி, களை எடுக்கும் கருவி, நாற்று நடும் இயந்திரம் உள்ளிட்ட பல கருவிகளுக்கும் டீசல், பெட்ரோலும் பயன்படுத்த வேண்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாய இடுபொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இடுபொருட்கள் ஏற்றிவர வாகன வாடகையும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு உடனடடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story