பொள்ளாச்சி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது

பொள்ளாச்சி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட ஈஸ்வரன்

வீட்டின் முன்பு கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தாலுக்கா காவல் துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வரும் ஜே.ஜே. காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் வீட்டை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அவரது வீட்டின் முன்பு கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்த 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா செடிகளை வளர்த்து தனது பயன்பாட்டுக்கும், மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முற்பட்டதும் தெரிய வந்தது. பின்னர் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல கஞ்சா செடி வளர்த்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!