திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ. 1.75 கோடியில் தெரு விளக்கு பணிகள்
பைல் படம்
திருவொற்றியூர் பகுதியில் ரூ.1.75 கோடி செலவில் தெருவிளக்கு பணிகளை மேற்கொள்ள மண்டல குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலகுழு மாதாந்திர சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் கே. கார்த்திக் பேசும்போது, எனது வார்டில் உயர் மின் அழுத்தம் பிரச்னையால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் பலரும் தொடர்ந்து குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும். அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டலம் முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையான நிறைவேற்றப்பட்டு வருகின்றன. படிப்படியாக மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளில் ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் 1,110 பழுதடைந்த தெருவிளக்குகள், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான 36 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu