/* */

கச்சத்தீவு பிரச்சினை குறித்து காங்கிரஸ், பாஜகவிற்கு பழ.நெடுமாறன் கேள்வி

கச்சத்தீவு பிரச்சினை குறித்து காங்கிரஸ், பாஜகவிற்கு பழ.நெடுமாறன் கேள்வி விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கச்சத்தீவு பிரச்சினை குறித்து காங்கிரஸ், பாஜகவிற்கு பழ.நெடுமாறன் கேள்வி
X

பழ நெடுமாறன்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக நமது கடற்படையும் கடலோர காவல்படையும் என்னதான் செய்தது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத் தீவு பிரச்சனைக் குறித்து பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி உண்மையான பிரச்சனையைத் திசைத்திருப்ப முயலுகின்றன.

இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சோமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து இக்கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு அமெரிக்க அரசு உள்பட பல நாட்டு அரசுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன. கடந்த பல ஆண்டு காலமாக இந்தியப் பெருங்கடலில் செல்லும் பிற நாட்டுக் கப்பல்களை சோமாலியா கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படைத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய சாதனைகளை புரிந்துவரும் இந்தியக் கடற்படை கரையோர கடற்படை என்ற நிலையிலிருந்து ஆழ்கடல் கடற்படை (Blue Water Navy) என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டதாக இந்தியக் கடற்படைத் தளபதி பெருமை பாராட்டிக்கொண்டிருக்கிறார்.

ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்த சோமாலியா நாடு, இந்தியாவிலிருந்து 1600 கடல் மைல்களுக்கப்பால் உள்ளது. இந்தியாவின் கடற்படை அதுவரையிலும் சென்று உலக நாடுகளின் கப்பல்களைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளுகிறது. ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு போவது போல, நமது மீனவர்களைப் பிடித்துக் கொண்டும் போகிறார்கள். நமது மீனவர்களுக்குச் சொந்தமான இயந்திரப் படகுகள், மீன் வலைகள் போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன. நமது மீனவர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

1983ஆம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வித அச்சமுமில்லாமல் சிங்கள கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடி வருகிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியக் கடற்படை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இராமேசுவரத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கடற்படையோ, கடலோரக் காவல்படையோ இதுவரை சிங்களக் கடற்படைக்கு எதிராக ஒரு சிறு நடவடிக்கைகூட எடுக்கவில்லை. எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற் கொள்ளையர்களிடமிருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, சிங்களக் கொள்ளையர்களிடமிருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்?

கச்சத் தீவு பிரச்சனையில் பா.ஜ.க.வும், காங்கிரசும் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி நமது மீனவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் சிங்களக் கடற்படைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் இதுவரை முன்வராதது ஏன்? என்பதற்குரிய காரணத்தை இந்த இரு கட்சிகளும் மக்களிடம் விளக்கியாகவேண்டும்.

இவ்வாறு பழ.நெடுமாறன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

பழ நெடுமாறனின் இந்த கேள்விக்கு பாஜகவும் காங்கிரசும் உடனடியாக பதில் அளிக்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுகோள் ஆகும். ஏனென்றால் இந்த இரு கட்சிகளும் தான் இந்தியாவை மாறி மாறி ஆண்டுள்ளன.

Updated On: 3 April 2024 10:35 AM GMT

Related News

Latest News

 1. பட்டுக்கோட்டை
  குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
 2. தென்காசி
  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
 3. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
 4. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
 5. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 6. குமாரபாளையம்
  கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
 7. ஈரோடு
  ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
 8. காஞ்சிபுரம்
  அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
 9. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
 10. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!