கும்பகோணத்தில் தடுப்பூசி போட நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து பலி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பெண் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-06-12 08:00 GMT

தடுப்பூசி மருந்து மாதிரி படம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியானாதால், அரசு மருத்துவமனை, சிறப்பு தடுப்பூசி முகாம் உள்ளிட்ட மையங்களில் பொதுமக்கள் காலை 7 மணி முதல் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு தடுப்பூசி வருவதில்  காலதாமதம் ஏற்பட்டது. சுமார் மூன்று  மணி நேரம் கால தாமதத்திற்கு பிறகு தடுப்பூசிக்காக டோக்கன் வழங்கப்பட்டது.

இதனால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் காலை ஏழு மணி முதல் சுமார் 5 மணி நேரத்த்திற்கு  மேல் பொதுமக்கள் வெயிலில்  நீண்ட வரிசையில் டோக்கன் வாங்க காத்திருந்தனர். கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக லெட்சுமி நாராயணபுரம் பகுதியை சேர்ந்த வள்ளிகண்ணு(40) என்ற பெண் காலை 7 மணி முதல் வரிசையில் நின்றுள்ளார்.

நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போடுவதற்காக வந்த பெண் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இறந்தார் என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும்.

Tags:    

Similar News