சிவகாசி அருகே தீக்குளிக்க முயன்ற பா.ஜ.க. பிரமுகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (55). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நிலம் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கி கொடுப்பதாக கூறிய சத்யராஜ், அவரிடம் 51 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு நிலத்தை வாங்கி கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்தார். இது குறித்து ஈஸ்வரன் திருத்தங்கல் காவல் நிலையத்தில், கடந்த மாதம் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், பண மோசடியில் ஈடுபட்டதாக சத்யராஜை கைது செய்தனர்.
பண மோசடி வழக்கில் சிறைக்கு சென்ற சத்யராஜ், ஜாமீன் எடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார். நேற்று இரவு திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வந்த சத்யராஜ், திடீரென்று தனது வேஷ்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது ஆடையில் குபீரென்று தீப்பிடித்தது. தீப்பிடித்த ஆடையை தூக்கி எறிந்துவிட்டு காவல் நிலையத்திற்குள் சத்யராஜ் ஓடினார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
சத்யராஜ் உடலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பாஜக நிர்வாகி சத்யராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பண மோசடியில் கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், காவல் நிலையத்திற்கு முன்பாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.