திருவில்லிபுத்தூர் அருகே நிரம்பி வழியும் மூன்று கண்மாய்கள்
திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் உட்பட 3 கண்மாய்கள் மீண்டும் நிரம்பி மறுகால் பாய்கிறது.;
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய், 2வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கண்மாய்க்கு வரும் வரத்து ஓடைகள், மலையடிவாரப் பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக, ஏற்கனவே மம்சாபுரம் பகுதியில் உள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பியது. இந்த கண்மாயிலிருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து, திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பி அதுவும் மறுகால் பாய்ந்தது. கடந்த வாரம் மழை சற்று குறைந்த நிலையில் தண்ணீர்வரத்து நின்றதால் கண்மாய்கள் மறுகால் பாய்வதும் நின்றிருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வாழைக்குளம் கண்மாய் மற்றும் பெரியகுளம் கண்மாய் 2வது முறையாக நிரம்பி மீண்டும் மறுகால் பாய்ந்து வருகிறது. மேலும் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்ததையடுத்து வேப்பங்குளம் கண்மாயும் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது.
திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் தண்ணீர் பெருகி வருவதால் இந்தாண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.