திருவில்லிபுத்தூர் அருகே கள்ள துப்பாக்கி, தோட்டா வைத்திருந்தவர்கள் கைது

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2023-06-07 08:28 GMT

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. மலையடிவாரப் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு மா, தென்னை, வாழை, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகை தோப்புகளும் உள்ளன. மேலும் திருவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும், சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் இருந்து வருகிறது.

இதனால் இந்த வனப்பகுதியில் வனத்துறையினர் எப்போதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவார்கள். இந்த நிலையில் மலையடிவாரப் பகுதியில் உள்ள தோப்பு மற்றும் தோட்டங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக தோப்புகளின் உரிமையாளர்கள் சிலர் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக, மின் வேலிகளை அமைத்துள்ளனர். மின் வேலிகளில் சிக்கி வன விலங்குகள் உயிரிழப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. மேலும் தோட்ட உரிமையாளர்கள் சிலர், தோட்டத்திற்குள் புகுந்துவிடும் வன விலங்குகளை வேட்டையாடும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், வனராஜா இருவரும் தங்களது வீடுகளில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வத்திராயிருப்பு காவல்நிலைய காவலர்கள் சரவணகுமார், வனராஜா வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சரவணகுமார் வீட்டில் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளையும், 78 தோட்டாக்களும் பதுக்கி வைத்திருந்ததை  கண்டுபிடித்தனர். மேலும் வனராஜா வீட்டிலிருந்து 1 நாட்டு துப்பாக்கியையும் கண்டுபிடித்தனர். வீட்டில் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த சரவணகுமார், வனராஜா மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த நிகில் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் 3 நாட்டு துப்பாக்கிகள், 78 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். வீட்டில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த 3 பேரும் வன விலங்குகளை வேட்டையாடினார்களா, வேறு எதுவும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தனரா என்பது குறித்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது நாட்டு வெடி குண்டுகள் பிடிபட்டு வந்தன. வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதும் இந்தப் பகுதியில் நடந்து வந்துள்ளது. வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளால் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்டுள்ள சம்பவம் மலைக் கிராமப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News