சிறுமியை கொலை செய்த குற்றவாளிக்கு, வாழ்நாள் சிறை தண்டனை
திருவில்லிபுத்தூர் அருகே, சிறுமியை கொலை செய்த குற்றவாளிக்கு, வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கார்த்திகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துஸ்ரீரங்கம் (35). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தனது மகன் சூரியபிரகாஷ் (19), மற்றும் மஞ்சுளா என்ற 17 வயது மகள் ஆகியோருடன் அதே பகுதியில் வசித்தார்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் இருந்த முத்துஸ்ரீரங்கத்தை, அவரது தங்கையின் கணவர் ஈஸ்வரஅய்யனார் (35) மது போதையில் பாலியல் தொந்தரவு செய்தார். முத்துஸ்ரீரங்கம் இதற்கு உடன்படாததால் அவரை அரிவாளால் தாக்கினார். இதனை அங்கிருந்த முத்துஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தடுத்துள்ளார். மகளுக்கும் அரிவாளால் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டால் காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மகள் மஞ்சுளாவை, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனலிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து ஈஸ்வரஅய்யனாரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், சிறுமியை கொலை செய்த ஈஸ்வரஅய்யனாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.