கோவில் திருவிழாக்களில், நெகிழி குப்பைகளை அகற்றும், சமூக ஆர்வலர்..!

ஆடி அமாவாசை நாளில் நெகிழிகளை (பிளாஸ்டிக்) சேகரித்த இயற்கை ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிகிறது.

Update: 2023-08-19 08:53 GMT

நெகிழிக்குப்பைகளை கொண்டுவந்து சேர்த்த மு.ரா.பாரதி.

மதுரை : விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவிலில் 12:8:2023 முதல் 17:8:2023 வரை நடை திறந்து ஆடி அமாவாசை ஆண்டு திருவிழா சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பூசை- அலங்காரத்துடன் காலை மாலை என ஆறு நாட்களும் 5 வேளை  அபிசேகங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

ஆடி மாதம் அமாவாசை நாளான 16:8:2023 புதன்கிழமை மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் குடும்பத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். அன்று மாலை, மலை இறங்கும் போது, மதுரை யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் மு.ரா.பாரதி,என்பவர் சதுரகிரி மலையில் பக்தர்கள் விட்டுச் சென்ற நெகிழி குப்பைகளை 30 கிலோ அளவுக்கு சேகரித்து, அடிவாரத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

இயற்கை ஆர்வலர் மு.ரா.பாரதியின் இந்த சமூக சேவையை வனத்துறை அதிகாரிகளும், பக்தர்களும் பாராட்டினார்கள். முன்னதாக, சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு நெகிழியை எப்படி பயன்படுத்துவது என்பது  பற்றியும் இந்த புனிதமான மலையில் குப்பைகளை வீச வேண்டாம் எனவும்  விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

மேலும் அவர் கூறும் போது, 'நான் எப்போதெல்லாம் சதுரகிரி மலை, பழனிமலை, அழகர்கோவில் மலை, மற்றும் சபரிமலை சென்று சாமி தரிசனம் முடித்து திரும்பும்போதெல்லாம்  நெகிழி மற்றும் இதர குப்பைகளையும் சேகரித்து, மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறேன்' என்று  கூறினார்.

மலைகளில் நெகிழிக்குப்பைகள் சேர்வதால் அவைகள் மண்ணுக்குள் புதைந்து மண்ணின் உயிரி பரவலை தடை செய்கின்றன. அதனால் மண்ணின் வளம் கெட்டுவிடும். காடுவளம் இல்லையெனில் மழை வளம் இல்லாமல் போகும். காடுகள்தான் மலையில் வளர்ந்துநின்று மண்வளத்தை வேர்களின் மூலமாக தக்கவைக்கின்றன. மழை பெய்யும்போது நீரை சேகரித்து புற்களின் வழியாக தேங்கவைத்து நீர் அருவிகளாக விழச் செய்கின்றன. 

அந்த நீர் அருவிகள் வழியாகவே பாறைகள், கற்கள் உடைக்கப்பட்டு மணல் துகள்களாக ஆற்று நிலப்பரப்பில் சேர்கின்றன. இவ்வாறு மணல் உருவாக பல நூறு ஆண்டுகள் ஆகும். ஆற்றில் மணல் இருந்தால் மட்டுமே நிலத்தடிநீர் பெருகும். மனித உடலுக்கு தோல் மேலாடையாக இருப்பதுபோல ஆற்றுக்கு மணல்தான் மேலாடை. அதை சுரண்டி அள்ளிவிட்டால் அங்கு நீர் கிடைக்காது. இரத்தம்தான் வரும். ஆமாம் ஆற்றில் மணல் இல்லாவிட்டால் நிலத்தடி நீரை பூமி இழக்கும். பூமி நிலத்தடி நீரை இழந்தால் மண் வளம் கெட்டு விவசாயிகள் மட்டுமல்ல மக்களும் மடிந்துபோகும் நிலை வரும்.

நெகிழிக்குப்பைகள் இந்த மண்ணிற்கான முதல் எதிரி என்பதை உணர்ந்து நெகிழி பயன்படுத்துவதையே தவிர்ப்போம். நெகிழிக் குப்பைகளை அள்ளிய மு.ரா.பாரதியை வாழ்த்துவோம்.

Tags:    

Similar News