மகாளய அமாவாசை, சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்!

மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்!

Update: 2023-10-15 02:30 GMT

'மகாளய அமாவாசை' தினத்தில், சதுரகிரிமலையில் திரண்ட பக்தர்கள் கூட்டம்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்.

சித்தர்கள் வசிக்கும் புண்ணிய மலையாக கருதப்படும் சதுரகிரிமலைக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள்.

நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாள். மகாளய அமாவாசை நாளன்று முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெறுவதற்காக திதி கொடுப்பது, சிவன் கோவில்களில் விளக்கேற்றி வழிபாடுகள் நடத்துவது, அன்ன தானம் வழங்குவது உள்ளிட்ட பல் வேறு நம்பிக்கைகள் பெரும்பாலானவர்களிடம் இருந்து வருகிறது. 

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிமலையில், சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காலை 6 மணியிலிருந்தே பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சதுரகிரிமலை அடிவாரப்பகுதி, நுழைவுப் பாதை, மலைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பக்தர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News