கார்த்திகை பௌர்ணமி: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்
இங்குள்ள மூலிகைகளும் மற்றும் அருவி நீரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொணடது என்பது ஐதீகம்
கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்.
கடந்த ஒன்றறை மாதங்களாக மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடுகளுக்கும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலைப் பகுதியில் பெரியளவில் மழை பெய்யாத காரணத்தால் நேற்று கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.
கார்த்திகை மாத பௌர்ணமி நாள் மற்றும் அதற்கு மறு நாளும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மலைப் பகுதியில் திடீர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், பக்தர்கள் கவனமாக செல்லுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். இன்று காலையில் இருந்து சதுரகிரிமலைப் பகுதியில் மழைக்கான அறிகுறிகளுடன், கடுமையான குளிர் நிலவுகிறது. மழை பெய்யத் துவங்கினால் மலைக் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அடிவாரப் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று வனத்துறையினர் கூறினர். இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக, சதுரகிரிமலைப் பகுதியில் குவிந்து வருகின்றனர்.
சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் சிவன் சுயம்புமூர்த்தியாக சற்று சாய்ந்த நிலையில் அனைவரும் அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில், ஆடி அமாவாசை திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி மற்றும் தை அமாவாசை, மார்கழி மாத இதர அமாவாசை பௌர்ணமி நாட்கள் போன்ற நாட்களில் விஷேசமாக இருக்கும்.திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள இறைவனை பிரதிக்கலாம். இங்குள்ள மூலிகைகளும் மற்றும் அருவி நீரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொணடது என்பது ஐதீகம்.