மனைவி, மாமியார் காெலை வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மனைவி, மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு 2 ஆயுள் தண்டனை. திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.;
மனைவி, மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு 2 ஆயுள் தண்டனை. திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கமலா. இவரது மகள் முத்துலட்சுமி (32). முத்துலட்சுமிக்கும், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முருகபாண்டி (44) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. கூலி வேலை பார்த்து வந்த முருகபாண்டிக்கும், முத்துலட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்ட முத்துலட்சுமி, திருத்தங்கல்லில் இருந்த தாயார் வீட்டுக்கு வந்து வசித்து வந்தார். முருகபாண்டியும் மாமியார் வீட்டுக்கு வந்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு, ஜுன் மாதம் முத்துலட்சுமியும், கமலாவும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, முருகபாண்டியன் அங்குவந்து வீட்டிற்குள் பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் முத்துலட்சுமியும், கமலாவும் உடல் முழுவதும் தீக்காயமடைந்து உயிருக்கு போராடினர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனலிக்காமல் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து முருகபாண்டியை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், குற்றவாளி முருகபாண்டிக்கு மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மனைவி, மாமியாரை எரித்து கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.