திருவில்லிபுத்தூரில் பலத்த மழை: ஊருக்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் அவதி
திருவில்லிபுத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை. கண்மாய் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள அனைத்து கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. சில கண்மாய்கள் முற்றிலும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் மீண்டும் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. பலத்த மழை காரணமாக இந்தப்பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வழிந்தன.
மொட்டபெத்தான் கண்மாய் நிரம்பிய நிலையில், கண்மாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் திருவில்லிபுத்தூர் நகர் பகுதிகளான ஓட்டமடத்தெரு, ஆராய்ச்சிபட்டி நாடார் தெரு, ஆத்துக்கடைதெரு, ரைட்டன்பட்டி தெரு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள வீடுகளைச்சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமமடைந்தனர். ஊருக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப்பின் திருவில்லிபுத்தூர் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது என்று பொது மக்கள் தெரிவித்தனர்.