சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதி: வனத்துறை அறிவிப்பு

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது

Update: 2023-12-07 03:14 GMT

பைல் படம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்.

இந்த மலைக் கோவிலுக்கு, ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக நான்கு நாட்கள் என, ஒரு மாதத்தில் எட்டு  நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக, வரும் 10ம் தேதி (ஞாயிற்றுகிழமை) முதல், 13ம் தேதி (புதன் கிழமை) வரையிலான 4 நாட்களும், பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும், தற்போது மலைப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது, இதனால் மலைப் பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து ஓரளவு குறைந்துள்ளது. எனவே பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில், மலைப் பகுதிகளில் மழை பெய்தால், பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News