நாடாளுமன்றத்தில் திமுக - அதிமுக இனி குரல் கொடுக்க முடியாது: கிருஷ்ணசாமி பேட்டி
திமுக, அதிமுக கட்சிகளால் இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது என்றார் புதியதமிழகம் கிருஷ்ணசாமி
திமுக, அதிமுக கட்சிகளால் இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: திமுக கட்சி 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் முடிந்த நிலையில், முக்கியமான வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதாக கூறியது மற்றும் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாதந்தோறும் மானியம் தருவதாக கூறியதையும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக மின் கட்டணத்தை, திமுக அரசு உயர்த்தியுள்ளது.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதே திமுகவின் வாடிக்கையாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து முடங்கி வருகிறது. மக்கள் அதிகமாக விரும்பும் சரவெடிகளுக்கு தடை விதித்திருப்பதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்களால் சுயமாக வளர்ந்த மாவட்டம் விருதுநகர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீனாவில் பட்டாசுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதனை ஆய்வு செய்து, சிவகாசியிலும் அது போல பட்டாசு தொழிலை நவீனப்படுத்தி, பட்டாசு தொழிலை ஊக்குவிக்க வேண்டும். தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சிவகாசி பகுதிகளை கந்தகபூமி, கந்தகபூமி என்று கூறாமல், வேளாண்மை பூமியாக மாற்ற வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தமிழ்நாட்டின் மிகவும் வறண்ட பகுதியாக இருக்கும் விருதுநகர், தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களிலும் கவனம் செலுத்தி, புதிய வேளாண்மை திட்டங்களை உருவாக்க வேண்டும்.
விருதுநகரில் அமைய இருக்கும் ஜவுளி பூங்கா, மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், சாயப்பட்டரை இல்லாத வகையில் அமைக்கப்பட உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தென் தமிழகத்தில் பெரிய வளர்ச்சிகள் எதுவும் இல்லை. கடந்த 3 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. திமுக, அதிமுக கட்சிகளால் இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது. அவர்கள் தேய்ந்த நிலையில் உள்ளனர். அடுத்து வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடருமா என்பதை தற்போது கூற முடியாது என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி..