மகா சிவராத்ரி முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

மகா சிவராத்திரி தரிசனத்திற்காக, சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2023-02-19 09:48 GMT

சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்:

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று மாசி மாத மகா சிவராத்திரி திருநாள் மற்றும் மகா சனி பிரதோஷம் நாளை முன்னிட்டு, மலைக் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலையில் இருந்தே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணியிலிருந்து, பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாலை 6 மணிக்கு மேல் மலைப் பகுதியில் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

சுவாமி தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் அனைவரும் அடிவாரப் பகுதிக்கு திரும்ப வேண்டும் என்று, வனத்துறையினர் வலியுறுத்தி கூறி வருகின்றனர். இன்று சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூரில் இருந்து ஏராளமான அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாசி மாத தேய்பிறை பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசை என இன்று 18ம் தேதி (சனி கிழமை) முதல், வரும் 21ம் தேதி (செவ்வாய் கிழமை) வரை மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அவசர மருத்துவ உதவி, சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.

Tags:    

Similar News