சதுரகிரி மலைக்கு நடந்து சென்ற பக்தர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
பக்தர் சிவாஜி நடந்து சென்றபோது அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
சதுரகிரிமலையில், மூச்சுத்திணறலால் சிவகங்கை பக்தர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் , திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிமலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்த சிவாஜி (55) என்ற பக்தர், தனது நண்பர்கள் சிலருடன் சதுரகிரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார்.
தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலிருந்து கோவிலுக்கு செல்லும் வழியில், பச்சரிசி பாறை பகுதியில் சிவாஜி நடந்து சென்றபோது அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மயங்கி விழந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சிவாஜியின் உடலை மீட்டு, அடிவாரப்பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாப்டூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படும் பக்தர்கள் உடனடியாக வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமிற்கு சென்று, உரிய மருத்துவ ஆலோசனைகள் பெறுமாறு வனத்துறையினர், போலீசார் பக்தர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.