திருவில்லிபுத்தூர் அருகே கார் மீது பஸ் மோதி ஒருவர் மரணம் : இருவர் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே குல தெய்வம் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக கோயம்புத்தூரிலிருந்து கார் விபத்தில் சிக்கியது;

Update: 2023-03-08 12:30 GMT

திருவில்லிபுத்தூர் அருகே விபத்தில் சிக்கிய கார்

திருவில்லிபுத்தூர் அருகே சொகுசு பேருந்து, கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார் குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் புலிவீரன் (30). இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், சங்கரன்கோவில் அருகேயுள்ள தனது குலதெய்வக் கோவிலில் வைத்து தனது மகளுக்கு முடி காணிக்கை செலுத்தி, காது குத்துவதற்காக புலிவீரன் தனது மனைவி மற்றும் மகளுடன், கோயம்புத்தூரில் இருந்து காரில் சங்கரன்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

காரை புலிவீரன் ஓட்டி வந்தார். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, தென்காசியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிர்பாராத விதமாக புலிவீரன் வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய புலிவீரன், சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த வன்னியம்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி உயிரிழந்த புலிவீரன் உடலை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ,விபத்தில் சிக்கி படுகாயமடைந்த புலிவீரனின் மனைவி மற்றும் மகளை மீ ட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News