சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதியா? பக்தர்கள் எதிர்ப்பார்ப்பு
சதுரகிரிமலைக்கு நாளை செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;
பைல் படம்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்.
இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆடி அமாவாசை திருவிழா சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவின் போது சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை திருவிழாவிற்காக வழக்கத்தை விட கூடுதலாக இரண்டு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் சற்று சிரமப்பட்டனர்.
இந்த நிலையில், நாளை ஆடி மாத பிரதோஷம் நாளை முன்னிட்டு வழக்கம் போல பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கான அனுமதி இது வரை வழங்கப்படவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், சதுரகிரி மலைப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மலைக் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பு, கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாளை 9ம் தேதி (செவ்வாய் கிழமை) வளர்பிறை பிரதோஷம், மறுநாள் 10ம் தேதி (புதன் கிழமை) ஆடித்தபசு, அதற்கு மறுநாள் 11ம் தேதி (வியாழன் கிழமை) ஆடி பௌர்ணமி நாட்கள் வருகின்றன.
மேலும் நாளை மொஹரம் பண்டிகைக்காக அரசு விடுமுறை நாளாக இருப்பதால், நாளை வளர்பிறை பிரதோஷம் நாளில் சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள், மாவட்ட நிர்வாகம் இது குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது. ஆடித்தபசு மற்றும் ஆடி பௌர்ணமி நாட்களில், சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிப்பதற்கு அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.