திருவில்லிபுத்தூர் அருகே கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் மூதாட்டி
திருவில்லிபுத்தூர் அருகே கோவில் திருவிழாவில் மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்வு நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருப் பகுதியில், 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை நாட்களிலும் 7 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள்.
கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களுக்கு முத்தம்மாள் (90) என்ற மூதாட்டியும் மற்றும் கோவில் பூசாரிகளும் கொதிக்கும் நெய்யை, பிரசாதமாக கருதி நெற்றியில் பூசி விடுவார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
மேலும் கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்டு பூஜை செய்யும் வழக்கமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முந்தைய காலங்களில் கிழவியாத்தா மற்றும் வள்ளியம்மாள் என்ற மூதாட்டிகள் வெறும் கையினால், கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தன.
தற்போது மூதாட்டி முத்தமமாள் வெறும் கையினால், கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு வழங்கி வருகிறார். இதற்காக மூதாட்டி முத்தம்மாள், கடந்த 40 நாட்களாக விரதம் இருந்து வருகிறார். இந்த திருநாளை முன்னிட்டு முன்னதாக அப்பம் தயாரிப்பதற்கான பொருட்களை ஊற வைத்து, விரதம் இருந்து வரும் பெண்களால், இனிப்பு உருண்டைகள் தயாரிக்கப்பட்டு, மூதாட்டியிடம் வழங்கப்படும். அவற்றை கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளினால் அப்பமாக சுட்டு, 7 கூடைகளில் நிரப்பபட்டு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஒவ்வொரு மகா சிவராத்திரியன்றும் விரதமிருந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம் வழங்கப்படும். மூதாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில், வெறுங்கையினால் சுடப்படும் அப்பத்தை சாப்பிட்டால், உடலில் நோய் நொடிகள் எதுவும் வராது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உடனடியாக மழலைப்பேறு கிடைக்கும்.
திருமண வயதில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகள் இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தாண்டும் இந்த நிகழ்ச்சியில் 7 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.