படிக்க சொன்ன ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.;

Update: 2023-12-04 13:26 GMT

அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஆசிரியர் 

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பொருளாதார பிரிவு ஆசிரியராக கடற்கரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாணவர்கள் இரண்டு பேரும் அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் வழக்கமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த விருதுநகர் டி.எஸ்.பி தலைமையிலான 4 தனிப்படை காவல்துறையினர் தப்பி ஓடிய மாணவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா, அப்பாவிற்கு பிறகு ஆசிரியருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என குழந்தைகளை சொல்லி சென்ற நூற்றாண்டில் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பார்கள். 2000ம் வருடம் முன்பு வரை ஆசிரியருக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது.

சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பார்கள். பிரம்பு அடி, வெயிலில் நிற்க வைப்பது. முழங்கால் போட வைப்பது, பெஞ்ச் மீது நிற்க வைப்பது, தோப்புக்கரணம் போட வைப்பது என தண்டனை வழங்குவார்கள். இது எல்லாம் தங்களை திருத்துவதற்குதான் என மாணவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்துள்ளது. ஆசிரியர் அடித்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்களை கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய் மாணவர்களை கண்டு ஆசிரியர்கள் பயப்படும் காலம் வந்து விட்டது என நினைக்கும்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News