சிவகாசியில் பஞ்சாயத்து தலைவி மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு பதிவு
சிவகாசியில் பஞ்சாயத்து தலைவி மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சிவகாசி அருகே உள்ள சொக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் மாரியம்மாள்( 70). இவர் தனது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் இணைப்பு கொடுக்க மறுத்து விட்டது. இதைதொடர்ந்து உரிய அனுமதி இன்றி முருகன் தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு போட்டு கொண்டதாக தெரிகிறது. இதை மாரியம்மாள் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள் மற்றும் ஆதரவாளர்கள் பழனியம்மாள், அங்காள ஈஸ்வரி, சங்கர் ஆகியோரை தாக்கி காயபபடுத்தினர். காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், முருகன், நாராயணன், பாலமுருகன், முனீஸவரன் ஆகிய 4 பேர் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.