விருதுநகரில் அம்மா இ-கிராமம் திட்டம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
விருதுநகர் மாவட்டம்அம்மா இ-கிராமம் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் அம்மா இ-கிராமம் திட்டத்தினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அம்மா இ-கிராமம் திட்டம் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவில் இது வரை கிடைக்கப் பெறாத நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.
அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி வட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இந்த கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்பவியல் வசதியினை கொண்ட கம்பியில்லா இணையதளம்(Hotspot), திறன்மிகு தெருவிளக்குகள்(Smart Screen Lighting), தொலைக்கல்வி(Tele Education), தொலை மருத்துவம்(Tele Medicine) போன்ற சேவைகள் வழங்கப்படும்.
அதன்படி, விஸ்வநத்தம் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடத்தில், கணினி அறிவு மையம் (Digital Knowlegde Center), கம்பியில்லா இணையதளம்(Hotspot), எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர் சேவை மையம், மகளிர் திட்ட பொது சேவை மையம் உள்ளிட்ட வசதிகள் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார், மின் மாவட்ட மேலாளர் ரஜனிதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.