திருத்தங்கல் நகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: எம்எல்ஏ தகவல்

திருத்தங்கல் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என அசோகன் சிவகாசி எம்.எல்.ஏ. பேட்டியளித்துள்ளார்.

Update: 2021-07-08 15:45 GMT

திருத்தங்கல் நகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எம்எல்ஏ அசோகன் தெரிவித்தார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட திருத்தங்கல் நகராட்சி பகுதியில் எம்எல்ஏ- அசோகன் நேரில் ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

திருத்தங்கல் நகராட்சி பகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் 1 மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த இடைவெளி நாட்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருத்தங்கல் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். திருத்தங்கல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் காளியம்மன் கோவில் அருகில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அப்படி அமைத்தால் திருவிழாக்காலங்களில் பக்தர்களும், போக்குவரத்துக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் மேம்பாலத்தை 100 மீட்டர் தொலைவுக்கு தெற்கு பகுதியில் நகர்த்தி பாலப் பணிகளை தொடங்கினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துகளை ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் இதை வலியுறுத்துவேன் என்றார் அவர்.

Similar News