பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் :ஆட்சியர் வாழ்த்து
தேர்வு முடிவுகளில் 97.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது
விருதுநகர் மாவட்டம், பிளஸ்-2 தேர்வில் முதலிடம்..மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரை பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இன்று காலை, பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளில், 97.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டம் பள்ளிக்கல்வியில் தொடர்ந்து சாதனைகள் செய்து வருகின்றது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வை 11 ஆயிரத்து, 843 மாணவிகளும், 10 ஆயிரத்து, 465 மாணவர்களும் என மொத்தம் 22 ஆயிரத்து, 308 மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுதினர். இதில், 11 ஆயிரத்து, 693 மாணவிகளும், 10 ஆயிரத்து, 135 மாணவர்களும் என மொத்தம் 21 ஆயிரத்து, 828 மாணவ, மாணவிகள்
தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக பிளஸ் -2 தேர்வில் 97.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாணவர்களின் வெற்றிக்கு துணையாக நின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக ஆட்சியர் ஜெயசீலன் செய்தி வெளியிட்டுள்ளார்.