விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி பலி, ஒருநபர் கைது
ராஜபாளையம் அருகே மான் வேட்டையாடிய ஒருநபரை போலீஸார் கைது செய்தனர்
ராஜபாளையம் அருகே, 2 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்த வனத்துறையினர் ஒரு நபரை கைத செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனவர் இளவரசன் தலைமையில், வனத்துறையினர் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது புல்லுப்பத்தி பீட் வனப் பகுதியில் மான் வேட்டையாடப்பட்ட அடையாளம் தெரிந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விசாரணையில் சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (28) மற்றும் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரிந்தது. மாரிமுத்து வீட்டில் சமைப்பதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மாரிமுத்துவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் மான் வேட்டையில் தொடர்புள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே, தனியார் சிமெண்ட் ஆலை கட்டுமானப் பணியின்போது நேரிட்ட விபத்தில் வடமாநில தொழிலாளி மரணம்:
விருதுநகர் அருகேயுள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான பிரபல சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் விரிவாக்கம் மற்றும் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணியில் 100க்கும் மேற்பட்ட, வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று கட்டுமானப் பணிகள் நடந்தபோது 50 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த இரும்பு சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கட்டிடத்தின் தரைப் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். உடனடியாக அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் சேர்ந்து சாரத்தின் இடிபாடுகளை அகற்றி விபத்தில் சிக்கிய இரண்டு பேரை மீட்டனர். இதில், ஜார்கண்ட் மாநிலம், கார்வா மாவட்டம், ஓபரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹரிஓம்குமார் (21) என்ற தொழிலாளி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராகேஷ்யாம் (22) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ஹரிஓம்குமார் உடல், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.