இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை, ஆடி, தை, பங்குனி உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். இந்த சிறப்பு விழா நாட்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் பங்குனி பொங்கல் கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. பங்குனி பொங்கல் திருவிழாவில் இருக்கன்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான நத்தத்துப்பட்டி, கலிங்க மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, நென்மேனி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கோலாகலமாக சிறப்பாக கொண்டாடுவார்கள். மேலும் ஆண்டுதோறும் முதல்நாள் பொங்கல் விழா மற்றும் மறுநாள் முளைப்பாரி திருவிழா என்று இரண்டுநாள் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒரே நாளில் நடத்தப்படுவதால் மிகக் குறைந்த அளவே பக்தர்கள் வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பொங்கல் விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.