'தீபாவளி பர்சேஸ்' - சிவகாசியில் திரண்ட மக்கள் கூட்டம்

சிவகாசி பகுதியில், தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில், மக்கள் கூட்டம் திரண்டது.

Update: 2022-10-23 11:50 GMT

சிவகாசி பிரதான வீதியில், தீபாவளி பர்சேஸ் செய்ய வந்த மக்கள் கூட்டம்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த சாரல்மழை காரணமாக நடைபாதை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு நேற்றுதான் போனஸ் பணம் வழங்கப்பட்டது. போனஸ் பணம் கிடைத்தவுடன் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருக்கு தேவையான புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் திரண்டனர். சிவகாசி நகர் பகுதிகள், புறநகர் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சிவகாசி நகர் பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக குவிந்தனர்.

இதனால் ,சிவகாசி பேருந்து நிலையப்பகுதி, காந்தி சாலை, ஜவுளிக்கடைவீதி, கிழக்கு ரதவீதி, என்ஆர்கேஆர் சாலை, அம்பேத்கர் சிலைப் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில், இன்று நடைபாதைகளில் உள்ள கடைகள் அனைத்திலும் வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் ,சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாரம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், பொருள்களை வாங்க, கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே சமயத்தில், புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

Similar News