சிவகாசி வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு:
சிவகாசி அருகே ரெங்கபாளையம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்காகுளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு ரெங்கபாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் சான்றிதழ் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. மேலும், பட்டாசு ஆலையின் அருகே மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று, பட்டாசு விற்பனை கடையையும் நடத்தி வந்தார்.
இந்த சூழலில், தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் பட்டாசுகளைத் தயாரிப்பதற்காக ஆலையின் பின்புறம் விதியை மீறி தகர கொட்டகை அமைத்து பட்டாசு கிப்ட் பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், பட்டாசு பெட்டி மீது பிளாஸ்டிக் தாளை ஒட்டி இயந்திரத்தில் வெப்பப்படுத்திய போது, வெப்பத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அந்த தீப்பொறி, அருகே இருந்த பட்டாசு கடைக்குள் விழுந்துள்ளது. கடையில் தீபாவளிக்காக அதிக அளவில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து சரமாரியாக வெடித்தன.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் தொழிலாளர்கள் தப்பியோட முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சிவகாசி அடுத்த மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், வேம்பு (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். சிவகாசி வட்டாரத்தில் ஒரேநாளில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.