மின் கட்டணம், சொத்து வரி உயர்வைக் கைவிட வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வு, பால் விலைஉயர்வு, சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்னைகளை சரிவர கையாளாத திமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்
சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளநகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் டிச.13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, டிசம்பர் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனினும், இதர மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவித்தவாறு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் டிச 14-ம் தேதியும், ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்ட பேரூராட்சி அளவிலான ஆர்ப்பாட்டம் டிச 16-ம் தேதியும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, கட்சித்தலைமை அறிவித்தபடி, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பொன்விழா மைதானம் பகுதியில் , அதிமுக சார்பில் வடக்கு நகரச் கழக செயலாளர் வழக்கறிஞர் துரை முருகேசன் தலைமையில், திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அம்மா பேரவை கழகச்செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் நவரத்தினம் ,வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குருசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துவரி உயர்வு, பால் விலைஉயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்னைகளை சரிவர கையாளாத திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக சார்பில் ஜவகர் மைதானம் பகுதியில் தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு,திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.