சிவகாசி அருகே தொழிலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்தவர் கொலை
சிவகாசி அருகே தொழிலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்தவர் கொலை செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபரை, அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (30). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரூபா (23). இவர் எட்டக்காபட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். அதே பட்டாசு ஆலையில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த, சாத்தூர் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26) என்பவருடன், ரூபாவிற்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குமாரலி்ங்கம் பகுதியில் வசித்துவரும் பாண்டிசெல்வத்தின் தாயார், நேற்று மாலை திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக பாண்டிசெல்வம் அங்கு சென்று விட்டார். இதனையறிந்த கருப்பசாமி, நேற்று இரவு ரூபாவின் வீட்டிற்கு சென்று, அவருடன் தனிமையில் இருந்துள்ளார்.
இன்று அதிகாலையில் திடீரென்று வீட்டுக்கு வந்த பாண்டிசெல்வம், தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த கருப்பசாமியை பார்த்து கடும் ஆத்திரமடைந்தார். உடனே அருகில் கிடந்த கட்டை மற்றும் கற்களால் கருப்பசாமியை கடுமையாக தாக்கினார்.இதில் படுகாயமடைந்த கருப்பசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கருப்பசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பாண்டிசெல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாண்டி செல்வம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.