சாத்தூர் அருகே பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில் 2 மாணவர்கள் படுகாயம்...
சாத்தூர் அருகே பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில் காயமடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர்கள் வைரவன் (14), வேலாயுதம் (9). பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும், அந்தப் பகுதியில் உள்ள ஓடைப் பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, ஓடையில் வீசப்பட்டிருந்த பட்டாசு ஆலை கழிவுகளில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் சிக்கிய மாணவர்களின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தனர். மாணவர்கள் இருவரும் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீக்காய சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மர்ம பொருள் வெடித்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் காயமடைந்ததாக தகவல் பரவியது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, ஓடையில் பட்டாசு கழிவுகளை யார் கொட்டியது? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் கழிவுகளை கொட்டிச் சென்றார்களா? என்ற கோணத்தில் வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பட்டாசு கழிவுகளை யாரேனும் ஓடையில் கொட்டிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே பட்டாசு கழிவுகள் அந்தப் பகுதிக்கு எப்படி வந்தது என்ற விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.