ராஜபாளையத்தில் பலசரக்கு கடை பெண் உரிமையாளர் படுகொலை - பரபரப்பு

ராஜபாளையத்தில், பலசரக்கு கடை பெண் உரிமையாளர், கடைக்குள் புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2021-11-08 23:15 GMT

இந்திராணி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (45). இவரது மனைவி இந்திராணி (42). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள், மதுரையில் ஒரு தனியார் கல்லூரியிலும், மகன் ராஜபாளையத்தில் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

கணேசனும், இந்திராணியும் வீட்டின் ஒரு பகுதியில் பலசரக்கு மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று, இந்திராணி கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். கணேசன், காய்கறிகள் வாங்குவதற்காக மார்க்கெட் சென்றிருந்தார். அப்போது கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர்,இந்திராணியின் கழுத்தை, கத்தியால் அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக, அந்தப்பகுதி மக்கள் கூறினர்.

இதுபற்றி, மார்க்கெட்டிற்கு சென்றிருந்த கணேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு கணேசன் விரைந்து வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் இந்திராணி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர் மன்னர்மன்னன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்து கிடந்த இந்திராணியின் உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து,  ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில், கடையின் பெண் உரிமையாளர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News