கந்துவட்டி கும்பலுக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை
கந்துவட்டி கும்பலுக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. மனோகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
விருதுநகர் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) அறிவுரையின் பேரில், ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த 7ம் தேதி முதல் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில், முத்தால் நகரைச் சேர்ந்த கனி என்பவரின் மனைவி விஜயலட்சுமி மீது, கந்துவட்டி வாங்கியதாக வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ, அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களிலோ, அல்லது தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையங்களிலோ புகார் மனுக்களை கொடுக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.