காரியாபட்டி அருகே கார் டயர் வெடித்து இருவர் உயிரிழப்பு
காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
காரியாபட்டி அருகே, காரின் டயர் வெடித்து நேரிட்ட விபத்தில் அதில் பயணம் செய்த தாய், மகன் உயிரிழந்தனர்.
காரியாபட்டி அருகே காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (32). இவர், அரசு போக்குவரத்துத்துறையில் நடத்துனராக வேலை பார்த்து வந்தார். இவரும், இவரது தாயார் மீனா (53), மனைவி உத்திரச்செல்வி (30), உறவினர்கள் அய்யாத்துரை (40), இவரது மனைவி மாலா (35), மகன் யோகித் (8) உட்பட 8 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, திண்டுக்கல்லுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை ஆனந்த் ஓட்டி வந்தார். காரியபட்டி அருகேயுள்ள ஆவியூர் பகுதியில், நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, காரின் பின்பக்க டயர்கள் இரண்டும் வெடித்துள்ளன. இதனால், நிலை தடுமாறி தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த ஆனந்த், அவரது தாயார் மீனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த மீதி 6 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவலறிந்து, ஆவியூர் காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து, விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த தாய், மகன் இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, ஆவியூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.