குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு குழந்தைகள்
நீச்சல் கற்றுக்கொள்ள தந்தையுடன் சென்ற இரு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக நீரில் முழ்கி உயிரிழந்தனர்
நீரில் மூழ்கிய இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். விபத்தில் ஒரு கை இழந்த இவர் தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது மனைவி மதன பிரியா மில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு 8 வயதான மோகுல் கிருஷ்ணன் மற்றும் 6 வயதான வர்ஷனா ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகுல் கிருஷ்ணன் தற்போது 4 ம் வகுப்பும் வர்ஷனா ஸ்ரீ 2 ம் வகுப்பும் செல்ல உள்ளனர்.
இன்று வழக்கம் போல, மதன பிரியா தனது குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயம் சக்திவேல், தனது இரண்டு குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
லாரி ட்யூபை பயன்படுத்தி தனது இரண்டு குழந்தைகளுக்கும் சக்திவேல் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த சமயம் இரண்டு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். ஒரு கை இழந்த சக்திவேலால் தனது குழந்தைகளை காப்பாற்ற இயலாமல் போனது.
இதனை அடுத்து அருகே உள்ளவர்களை சக்திவேல் உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து பார்க்கும் முன்னதாக இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.உறவினர்களின் உதவியுடன் இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்த கீழ ராஜ குலராமன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இரண்டு குழந்தைகளும் இறந்த சம்பவம் ஊருக்குள் பரவியதால் சக்திவேல் வீட்டில் சுற்றி உறவினர்கள் திரண்டு நின்றனர். ஏற்கெனவே மாரியம்மன் கோயில் பொங்கல் நடந்து வரும் நிலையில், எதிர்பாராத துயர சம்பவம் காரணமாக பொங்கல் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.