இராசபாளையம் அருகே டிராக்டர் ஓட்டுநர் வெட்டிக் கொலை: இருவர் கைது
இராசபாளையம் அருகே டிராக்டர் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.;
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (21). இவர் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் செங்கல் சூளையில், டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
ராஜ்குமாருக்கு, மாடசாமி சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளார். ராஜ்குமார் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். நேற்றும் மாடசாமியிடம் தனக்கு தர வேண்டிய பணம் குறித்து ராஜ்குமார் கேட்டுள்ளார்
. அப்போது அங்கிருந்த மாடசாமியின் உறவினர்களான கணேஷ்குமார் (28), இவரது தம்பி ஆனந்தகுமார் (26) இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த சேத்தூர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணேஷ்குமார், ஆனந்தகுமார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.