ராஜபாளையத்தில் சாலை மறியல்: போலீஸார் தடியடி
ராஜபாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மலை குறவர் இன மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது;
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட மலை குறவர் இன மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே தென்காசி மதுரை சாலையில் வன வேங்கை கட்சியைச் சேர்ந்த மலை குறவர் இன மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 8 நாட்களாக வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியில் மத்திய அரசு அறிவித்துள்ள எஸ்.டி. பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர் மக்களை தங்களுடன் சேர்த்து குறவர் இனம் என அழைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போலீஸார் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகக் கூறி உண்ணாவிரதம் இருந்தவர்களைபோலீசார் அப்புறப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென மறியல் போராட்டத்தில் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .
போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர். இதில் ,போலீசாருக்கும் பொது மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் ,கடைகள் அடைக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியது. சாலை மறியலில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.