விருதுநகரில் வருவாய்த் துறை அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்

விருதுநகரில் பள்ளி சாரா கல்வித்திட்ட பயனாளிகளுக்கு அமைச்சர்கள் ராமச்சந்திரன், அன்பில் மகேஸ் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.

Update: 2022-07-12 16:15 GMT

விருதுநகரில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில்

எழுத்தறிவு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினர். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், சாத்தூர் எம்.எல்ஏ.ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில்மகேஷ் பேசும்போது,சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் எழுத்தறிவு பயிற்சி பெற்ற 22 பேருக்கு, அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனையும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தினை தமிழக அரசின் 100 சதவிகித பங்களிப்பின்கீழ் 6 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கல்வியும் சுகாதாரமும் இரு கண்களாக எண்ணி இந்த அரசு செயலாற்றி வருகிறது. தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து, 895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். தமிழகத்தில் தான் அதிகபட்ச அளவில் 80.33 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 15 வயதிற்கு மேல் பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 9 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்து, எழுத்தறிவு பெற்ற மாவட்டத்தையும், தமிழகத்தையும் உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

நிகழ்ச்சியில், இணை இயக்குநர்(பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்) அமுதவல்லி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி ராஜசேகரன், சிவகாசி துணை மேயர் விக்னேஷ்பிரியா, முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News