ராஜபாளையத்தில் குடிநீர் கசிவை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு...
ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய தோண்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தை சேர்ந்தவர் பொன் இருளப்பன். (வயது 30). இவர், தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில், மனைவி சபரீஸ்வரியுடன் ஶ்ரீரெங்கபாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், பொன் இருளப்பன், ஸ்ரீரங்கபாளையம் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் டிபி மில்ஸ் சாலையில் சென்றுள்ளார்.
அவர் சென்று கொண்டிருந்த சாலையின் நடுவே, தாமிரபரணி குடிநீர் குழாயில் இருந்த கசிவை நீக்குவதற்காக 10 அடி ஆழத்தில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டிருந்ததை இருட்டில் சென்ற பொன் இருளப்பன் கவனிக்கவில்லை. இதனால், எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த அந்த பள்ளத்தில் பொன் இருளப்பன் இருசக்கர வாகனத்துடன் விழுந்துவிட்டார்.
இரவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அவர் பள்ளத்துக்குள் விழுந்தது வெளியே தெரியாமல் இருந்துள்ளது. இரவில் வீடு திரும்பாத அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற பொது மக்கள் குழிக்குள் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது இறந்து கிடந்தது பொன் இருளப்பன் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, உறவினர்களுக்கு தகவல் அளித்த காவல் துறையினர் பொன் இருளப்பன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் பெரிய அளவிலான பள்ளம் இருப்பது குறித்து முறையான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததே இன்றைய விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. குழியை சுற்றி சிறிய அளவிலான டேப் மட்டும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளை சுற்றி தடுப்பு பலகை அமைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.